ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்களை இயக்குவது தீர்வு அல்ல: டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்
ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக எம்.எல்.ஏக்களுடன் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
புதுடெல்லி,
டெல்லி மதன்பூர் காதரில் கடந்த வியாழக்கிழமையன்று, தெற்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எஸ்.டி.எம்.சி) நடத்திய ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளூர் மக்களுக்கும் டெல்லி போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அமானதுல்லா கான் கைது செய்யப்பட்டார். மேலும், ஒரு பெண் மற்றும் அவரது மைனர் மகள் உட்பட அப்பகுதியின் 12 குடியிருப்பாளர்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
இந்த நிலையில், ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களுடன் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த சந்திப்பை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
“புல்டோசர்களை இயக்குவது ஆக்கிரமிப்புகளுக்கு தீர்வாகாது. மாநகராட்சி தரப்பில் 63 லட்சம் மக்களுக்கு எதிராக புல்டோசர்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் இது மிகப்பெரிய தகர்ப்பு நடவடிக்கை என்று நான் நம்புகிறேன்.
அதே வேளையில், நாங்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு ஆதரவாக இல்லை.ஆனால் அந்த சிக்கலை சரிசெய்வோம், ஆனால் அதற்காக புல்டோசர்களை இயக்குவது தீர்வு அல்ல. தாதா,குண்டர்கள் போல செய்வது சரியில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது சரியல்ல.
நான் எங்கள் எம்.எல்.ஏ.க்களுடன் ஒரு கூட்டம் நடத்தினேன். நாம் மக்களுக்காக நிற்க வேண்டும். அதற்காக நாம் ஜெயிலுக்கு போனாலும் பயப்படவேண்டாம் என்று அவர்களிடம் தெரிவித்தேன்.
Even we're against encroachment but we oppose the way it's being done.They (BJP) are planning to demolish all unauthorized colonies,slums & have a list of partial encroachments.This would make about 63 lakh people homeless...bulldozing won't be tolerated: Delhi CM Arvind Kejriwal pic.twitter.com/mCsbAXPfPp
— ANI (@ANI) May 16, 2022
டெல்லி மாநகரம் திட்டமிட்ட வகையில் விரிவாக்கம் செய்யப்படவில்லை. நகரத்தின் 80 சதவீதத்திற்க்கும் அதிகமானவை சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு. அப்படியிருக்கும் போது, பாஜகவால் நகரின் 80 சதவீத பகுதிகளும் இடிக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
15 ஆண்டுகால டெல்லி மாநகராட்சி கார்ப்பரேஷன் ஆட்சியில் பாஜக என்ன செய்தது? தேர்தல் நடக்கட்டும், புதிய மாநகராட்சி கார்ப்பரேஷன் ஒரு முடிவை எடுக்கட்டும். ஆக்கிரமிப்பு பிரச்சினையை தீர்ப்போம் என்று டெல்லிவாசிகளுக்கு உறுதியளிக்கிறோம்; அங்கீகரிக்கப்படாத காலனிகளை முறைப்படுத்துவோம், டெல்லியில் சேரிகளை அகற்றுவோம்.”
ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக எம்எல்ஏக்களுடன் நடந்த சந்திப்பை தொடர்ந்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வாறு கூறினார்.