ராகுல் காந்தி நாட்டை ஆள்வார் - கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் மீண்டு வரும் என்று டிகே சிவக்குமார் கூறினார்.

Update: 2022-05-15 16:14 GMT
உதய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின்  3 நாள் சிந்தனை அமர்வு மாநாடு - ‘நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்’ என்ற பெயரில் நடைபெற்றது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கும், தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ள கட்சிக்கு புத்துயிரூட்டவும்  மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டின் கடைசி நாளான இன்று, காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சோனியா காந்தி நிறைவுரையாற்றினார். மாநாடு முடிவடைந்த பின், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கூறியதாவது:-

“காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டை ஆள்வார்.  ராகுல் காந்தி 2024ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவார். ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் மீண்டு வரும் என்று அனைவரும் நம்புகிறோம். ஒட்டுமொத்த கட்சியும் ஒன்றுபட்டுள்ளது, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்” என்றார்.

இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  ஒரு நபருக்கு ஒரு பதவி' மற்றும் ‘ஒரு குடும்பம், ஒரே சீட்டு’ என்ற விதியை அக்கட்சி ஏற்றுக்கொண்டது. 

முக்கியமாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை "பாரத் ஜோடோ யாத்திரை", இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று தொடங்குகிறது. கட்சி அமைப்பின் விரிவான பரிந்துரைகள் விரைவாக செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்