சரத்பவார் குறித்து முகநூலில் அவதூறு; மராத்தி நடிகை கைது
சரத்பவார் குறித்து முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்ட மராத்தி நடிகை கேதகி சிதாலே கைது செய்யப்பட்டார்.
சரத்பவார் குறித்து அவதூறு
மராத்தி நடிகை கேதகி சிதாலே வேறு நபர் எழுதியது என கூறி முகநூலில் சரத்பவார் குறித்து அவதூறு கருத்தை பதிவு செய்தார். அவரது பதிவில் 'நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள்', 'நரகம் உங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறது' என கூறியிருந்தார்.
நடிகையின் முகநூல் பதிவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக தானே, புனே உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர்.
மாநிலம் முழுவதும் சுமார் 200 போலீஸ் நிலையங்களில் நடிகைக்கு எதிராக தேசியவாத இளைஞர் அணியினர் புகார் அளித்து இருப்பதாக வீட்டு வசதித்து துறை மந்திரி ஜித்தேந்திர அவாத் கூறினார். இதேபோல சரத்பவார் குறித்து அவதூறு பரப்பிய நடிகையை கைது செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் புனே மாவட்ட தலைவர் பிரசாந்த் ஜக்தாப் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி இருந்தனர்.
நடிகை கைது
இதேபோல தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கிளைட் கிரஸ்டோ, " சரத்பவாருக்கு எதிராக அவதூறு பரப்பி மலிவு விளம்பரத்தை பெற முடியும் என்பதை மராட்டிய பா.ஜனதாவிடம் இருந்து நடிகை கற்று இருப்பார்" என விமர்சித்து இருந்தார்.
இந்தநிலையில் கல்வா போலீசார் நடிகை கேதகி சிதாலே மீது அவதூறு பரப்புவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே சரத்பவார் குறித்து அவதூறு பரப்பியதாக தானே குற்றப்பிரிவு போலீசார் நடிகை கேடகி சிதாலேயை அதிரடியாக கைது செய்தனர். அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.