அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 7 பேர் உடல்கருகி பலி

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.

Update: 2022-05-07 06:24 GMT
Image Courtesy: PTI
போபால்,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் ஸ்வர்னா பக் காலனியில் இரண்டு அடுக்குகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வீட்டில் பற்றிய தீ மளமளவென குடியிருப்பில் இருந்த மற்ற வீடுகளுக்கு பரவியது. இந்த தீ விபத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த பலர் சிக்கிக்கொண்டனர்.

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், குடியிருப்பில் சிக்கி இருந்த 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்