100 நாள் வேலைத்திட்ட பண மோசடி வழக்கு: ஜார்கண்டில் அமலாக்கத்துறை சோதனையில் ரூ.18 கோடி பறிமுதல்
100 நாள் வேலைத்திட்டத்தில் நடந்த மோசடி தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
ராஞ்சி,
100 நாள் வேலைத்திட்டத்தில் நடந்த மோசடி தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ரூபாய் நோட்டு எண்ணும் எந்திரங்களை கொண்டு வந்து பணம் எண்ணப்பட்டது.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை ஜார்கண்ட் மாநில அரசில் இளநிலை என்ஜினீயராக பணியாற்றி வந்தவர் ராம்வினோத் பிரசாத் சின்கா. இவர் தனது பணிக்காலத்தில், குந்தி மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிதியில் ரூ.18 கோடி மோசடி செய்தார்.
அந்த பணத்தை அவ்வப்போது தனது கணக்கிலும், குடும்ப உறுப்பினர்கள் கணக்கிலும் மாற்றி வந்தார். அசையும், அசையா சொத்துகளை வாங்கினார். அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் 16 வழக்குகளை பதிவு செய்தனர்.
அந்த வழக்குகள் அடிப்படையில், அமலாக்கத்துறை, அவர் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கை பதிவு செய்தது. ராஞ்சியில் உள்ள தனி கோர்ட்டு பலதடவை சம்மன் அனுப்பியும் சின்கா ஆஜராகவில்லை. தலைமறைவாக இருந்த அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், 2020-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
ராம்வினோத் பிரசாத் சின்காவுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவரது ரூ.4 கோடியே 28 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி மற்றும் சில மாநிலங்களில் 18 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அவர்களுக்கு பாதுகாப்பாக சி.ஆர்.பி.எப். படையினர் சென்றனர்.
ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில், ஜார்கண்ட் அரசின் சுரங்கத்துறை செயலாளரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா சிங்காலின் வீடு மற்றும் அவருடைய குடும்பத்தினரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.
அவர் குந்தி மாவட்டத்தில் துணை ஆணையராக முன்பு பணியாற்றியதால் அவரையும் குறிவைத்து இச்சோதனை நடந்தது. ராஞ்சியில் ஒரு ஆஸ்பத்திரியிலும் சோதனை நடத்தப்பட்டது.
ராஞ்சியில் ஒரு ஆடிட்டர் வீட்டில் நடந்த சோதனையின்போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் திடுக்கிட்டனர். அங்கு கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. அதை எண்ணுவதற்கு ரூபாய் நோட்டு எண்ணும் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. எண்ணி பார்த்தபோது, ரூ.17 கோடி இருந்தது. ராஞ்சியில் மற்றொரு இடத்தில் நடந்த சோதனையின்போது ரூ.1 கோடியே 80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.