உயர்கல்வி நிறுவனங்களில் உடற்பயிற்சி அவசியம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
உயர்கல்வி நிறுவனங்களில் ஒவ்வொரு மாணவரும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) உயர்கல்வி நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே உடற்பயிற்சியையும், விளையாட்டு செயல்பாடுகளையும் ஊக்குவிப்பதே இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் முக்கிய நோக்கம். உயர்கல்வி நிறுவனங்களில் போதிய மனித வளமும், விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகளும் இருந்தபோதிலும், அங்கு விளையாட்டு கட்டாயம் அல்ல என்பது முரண்பாடாக உள்ளது.
இத்தனைக்கும் விளையாட்டுக்காக ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், மொத்த மாணவர்களில் ஒன்று அல்லது இரண்டு சதவீத மாணவர்களே விளையாட்டு சாதனங் களை பயன்படுத்துகிறார்கள்.
ஆரோக்கியமான உடலமைப்பை உருவாக்க போதிய உடற்பயிற்சி அவசியம். ஆகவே, ஒவ்வொரு மாணவரும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுவதை உறுதிசெய்ய வேண்டும்.
மாணவர்கள் மனஅழுத்தம் இன்றி செயல்படுவது அவசியம். அதற்காக, கிராமப்புற மாணவர்கள், மாணவிகள், பல்வேறு கலாசார பின்னணி கொண்டவர்கள் ஆகியோருக்கு மனஉறுதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு நேர்மறை எண்ணங்களை உருவாக்க வேண்டும். கற்றல்-கற்பித்தலுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும். பாடத்திட்டம் சாராத செயல்பாடுகள், வேலைவாய்ப்பு முகாம்கள், கல்வி சுற்றுலா, கோடைகால பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை நடத்தலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.