தீப்பிடித்த ஒவ்வொரு சம்பவம் பற்றியும் விசாரிக்கப்படும் மின்சார வாகன தொழில் செழித்து வளரும் மத்திய அரசு உறுதி

சமீபகாலமாக மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

Update: 2022-05-01 21:48 GMT
புதுடெல்லி, 

சமீபகாலமாக மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதுவரை 23 ஸ்கூட்டர்கள் எரிந்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக செயலாளர் கிரிதர் அரமனே ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மின்சார வாகனங்கள் தீப்பிடித்த ஒவ்வொரு சம்பவமும் விசாரிக்கப்படும். இதற்காக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு இன்னும் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

மின்சார வாகனங்களின் கொள்முதல், வடிவமைப்பு, நிர்வாகம், பேட்டரி உற்பத்தி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளும் ஆய்வு செய்யப்படும்.

இந்த தீப்பிடிக்கும் சம்பவங்களால், மின்சார வாகன தொழிலில் இந்தியா முன்னணி நாடாக ஆவது பாதிக்கப்பட வாய்ப்பில்லை. மின்சார வாகன உற்பத்தியாளர்கள், தரம், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை சரிசெய்து விடுவார்கள்.

அதன் மூலம் இந்தியாவில் மின்சார வாகன தொழில், நாம் கற்பனை செய்ததை விட அதிகமாக செழித்து வளரும்.

தேசிய பணமாக்கல் திட்டத்தால் கடந்த நிதி ஆண்டில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி கிடைத்தது. தேசிய நெடுஞ்சாலை திட்டமான பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் முதலாவது பகுதி, ஓராண்டு தாமதமாக 2023-2024 நிதி ஆண்டில்தான் முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்