மின்வெட்டுக்கு காரணம் யார்? ப.சிதம்பரம் ட்வீட்
நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாடு குறித்து முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
நாட்டில் கோடை வெப்பம் சுட்டெரிக்கிறது. இந்த தருணத்தில் பரவலாக மின்வெட்டு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அனல்மின்நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
எதற்கெடுத்தாலும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு குறை கூறி வருவதால் மின்வெட்டுக்கும் காங்கிரஸ் ஆட்சியைத்தான் அவர்கள் குற்றம் சாட்டுவார்கள் என்பதை, அவர்கள் பாணியிலேயே முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சாடி டுவிட்டரில் கிண்டலாக பதிவுகள் வெளியிட்டார்.
அவற்றில் ஒன்றில், “அளவில்லாத நிலக்கரி, மிகப்பெரியதொரு ரெயில் சேவை, அனல்மின் நிலையங்களின் செயல்படாத திறன். ஆனாலும் கடுமையான மின்சார தட்டுப்பாடு உள்ளது. மோடி அரசை குற்றம் சாட்ட முடியாது. இதற்கு காரணம் 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிதான்! ” என கூறி உள்ளார்.
இன்னொரு பதிவில், “நிலக்கரி, ரெயில்வே அல்லது எரிசக்தி அமைச்சகங்களில் திறமையின்மை இல்லை. கடந்த காலத்தில் அந்தத் துறையை வகித்த காங்கிரஸ் மந்திரிகள்தான் திறமையற்றவர்கள்” என கூறி உள்ளார்.
மற்றொரு பதிவில், “அரசு சரியான தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறது: பயணிகள் ரெயில்கள் ரத்து, நிலக்கரி ரெயில்கள் இயக்கம்! மோடி பிரதமர் என்றால் எந்த துறையிலும் எந்த வளர்ச்சியும் சாத்தியம்!” என கூறி உள்ளார்.