‘சிறிய நகரங்களில் தொழில் நிறுவனங்களை அமையுங்கள்’ - பிரதமர் மோடி வலியுறுத்தல்
ெபரிய நகரங்களுக்கு பதிலாக சிறிய நகரங்களில் தொழில் நிறுவனங்களை அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
சூரத்,
குஜராத் மாநிலம் சூரத்தில் 3 நாள் உலக பட்டிதார் (சமூக) தொழில் அதிபர்கள் உச்சி மாநாடு - 2022 நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு காணொலிக்காட்சி வழியாக தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உலகிலேயே அதிவேகமாக வளர்ந்து வருகிற நகரங்களில் ஒன்று சூரத். இன்றைய இந்தியாவில் நிறைய இருக்கிறது. நாம் நமது தன்னம்பிக்கையை, நமது தற்சார்பு உணர்வை பலப்படுத்த வேண்டும். வளர்ச்சியில் அனைவரின் பங்களிப்பும், முயற்சியும் வரும்போதுதான் இந்த நம்பிக்கை வரும்.
அரசின் கொள்கைகள் மற்றும் அதன் செயல்பாட்டின் மூலம், சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள்கூட தொழில் அதிபர்களாக மாறக்கூடிய சூழல் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக அரசு தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனவே தொழில் அதிபர்களாக கனவு காணுங்கள். அதில் பெருமை கொள்ளுங்கள்.
பெருந்தொற்று சவால்களுக்கு மத்தியிலும் எம்.எஸ்.எம்.இ. என்று சொல்லப்படுகிற குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அதிவேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. பெருமளவிலான நிதி உதவியுடன் இந்த துறையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்பட்டன. தற்போது இந்த துறை வேலை வாய்ப்புக்களை உருவாக்கி வருகிறது.
வங்கி மற்றும் பிற துறைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு மாற்றி அமைக்கலாம் என்பது பற்றியும் பரிந்துரைகளை வழங்குவதற்கு நீங்கள் தொழில்அதிபர்களை கொண்டு குழு அமையுங்கள்.
விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கான வழிகளையும், அதில் முதலீடுகளை கொண்டுவருவதற்கான வழிகளையும் கண்டுபிடியுங்கள்.
இயற்கை சாகுபடி செய்யுங்கள். வயல்களில் உள்ள உதிரியான பகுதிகளில் சூரிய மின்சக்தி தகடுகள் பதிப்பதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராயுங்கள். மூலிகை மற்றும் ஆயுஷ் துறையிலும் புதிய வாய்ப்புகளை பார்க்கலாம்.
நிதி சாம்ராஜ்யங்களை ஏற்படுத்துவதில் புதிய கண்ணோட்டம் வேண்டும். தொழில் நிறுவனங்களை பெரிய நகரங்களுக்கு பதிலாக சிறிய நகரங்களில் ஏற்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.