நாடு முழுவதும் 657 பயணிகள் ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு முடிவு
நாடு முழுவதும் 657 பயணிகள் ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்கள் நீண்ட நேர மின்வெட்டு பிரச்சனையை சந்தித்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மின் வெட்டு பிரச்சினையை சரிசெய்ய மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்து, நிலக்கரி கொண்டு செல்லும் ரயில்களை வேகமாக இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் 657 பயணிகள் ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இந்திய ரயில்வே செயல் இயக்குநர் கூறுகையில், "தற்போதைய அவரச காலச் சூழலில் எடுத்துள்ள தற்காலிக முடிவு இது. மின் நிலையங்களுக்கு வேகமாக நிலக்கரியை கொண்டு சேர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரானதும் சேவைகள் வழக்கம்போல இயங்கும்.
நிலக்கரி தட்டுப்பாட்டால் பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் 533 சரக்கு பெட்டிகளில் நிலக்கரி கொண்டு செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. மின்துறைக்கு வழங்க ரயில்களில் 1.62 மில்லியன் டன் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.