டெல்லி எய்ம்ஸ் நர்சுகள் சங்கத்தினர் போராட்டம் வாபஸ்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வரும் நர்சுகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் நர்சுகள் கடந்த 23-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணியாளர் பற்றாக்குறை உள்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் எதிரொலியால் கிட்டத்தட்ட 50 திட்டமிடப்பட்ட ஆபரேஷன்கள் ரத்து செய்யப்பட்டன. நர்சுகள் குழு நடத்திய இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காகவும், டாக்டர்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும் நர்சுகள் சங்கத்தின் தலைவருமான ஹரிஷ்குமார் கஜ்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைக் கண்டித்து நர்சுகள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இதைத்தொடர்ந்து, சுமார் 500-க்கும் மேற்பட்ட நர்சுகள் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நர்சுகள் சங்கத் தலைவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவருக்கு விதிக்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறி நர்சுகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வரும் நர்சுகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். இதுதொடர்பாக, நர்சுகள் சங்கத்தினர் கூறுகையில், டெல்லி ஐகோர்ட் உத்தரவை ஏற்று நாங்கள் எங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.