சுருக்குமடி வலை விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கடலில் 5 கி.மீ. சுற்றளவுக்கு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க கோரிய ரிட் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
விழுப்புரம் மாவட்டம் பனிச்சமேடுகுப்பத்தைச் சேர்ந்த ஞானசேகர் உள்ளிட்ட 9 மீனவர்கள் சார்பில் வக்கீல் என்.கே.வர்மா சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‘கடலில் 5 கி.மீ. சுற்றளவுக்கு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கவும், 12 கடல் மைலுக்கு அப்பால் சென்று சுருக்குமடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி இந்திராபானர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின் ஆஜராகி, ‘கடலில் 5 கி.மீ. சுற்றளவுக்கு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என வாதிட்டார்.
இதற்கு நீதிபதிகள், ‘விரிவாக விசாரிக்காமல் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.
இந்த ரிட் மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிடுகிறோம். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குடன் இந்த மனுவையும் இணைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.