அனுமன் பஜனை பாடுவது தேசத்துரோகம் என்றால்... மராட்டிய அரசு மீது தேவேந்திர பட்னாவிஸ் பாய்ச்சல்
அனுமன் பஜனை பாடுவது தேசத்துரோகமா? அப்படி என்றால், நாங்கள் அனைவரும் அனுமன் பஜனை பாடுவோம் என்று மராட்டிய அரசை தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்துள்ளார்.
மும்பை,
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பஜனை பாடுவேன் என அமராவதியை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. ரவி ரானா கூறியிருந்தார். இதற்காக அவர் மனைவி நவ்னீத் ரானா எம்.பி.யுடன் கடந்த வெள்ளிக்கிழமை மும்பை வந்தார். அவர்களுக்கு சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் என போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ரவி ரானா, நவ்னீத் ரானாவை போலீசார் கைது செய்தனர். இருபிரிவினர் இடையே மோதலை தூண்டுவது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மராட்டிய எதிர்க்கட்சித்தலைவரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னவிஸ், அனுமன் பஜனை பாடுவது தேசத்துரோகமா? அப்படி என்றால், நாங்கள் அனைவரும் அனுமன் பஜனை பாடுவோம். எங்களுக்கு எதிராக தேச்த்துரோக வழக்கை மராட்டிய அரசு பதிவு செய்யட்டும். மராட்டிய எம்.பி நவ்னீத் ரானாவுக்கு சிறையில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.
அவரது சாதி குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கப்படவில்லை” என்றார்.