நவ்னீத் ரானா, ரவி ரானாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
நவ்னீத் ரானா, ரவி ரானா ஆகியோர் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
மும்பை,
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பஜனை பாடுவேன் என அமராவதியை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. ரவிரானா கூறியிருந்தார். இதற்காக அவர் மனைவி நவ்னீத் ரானா எம்.பி.யுடன் கடந்த வெள்ளிக்கிழமை மும்பை வந்தார். அவர்களுக்கு சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் என போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இந்தநிலையில் ரானா தம்பதிக்கு எதிராக நேற்று முன் தினம் அவர்களது கார் வீட்டின் முன் சிவசேனா தொண்டர்கள் அதிகளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மும்பையில் பதற்றமாக சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று முன் தினம் மாலை ரவி ரானா, நவ்னீத் ரானாவை போலீசார் கைது செய்தனர். இருபிரிவினர் இடையே மோதலை தூண்டுவது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இந்தநிலையில் போலீசார் பாந்திராவில் உள்ள விடுமுறை கோர்ட்டில் 2 பேரையும் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டு 2 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். மாநில அரசு, முதல்-மந்திரிக்கு எதிராக பேசியதால் ரவி ரானா, நவ்னீத் ரானா மீது தேசதுரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அரசு தரப்பு வக்கீல் பிரதிப் காரட் கூறினார்.