ஆந்திர அரசு ஆஸ்பத்திரியில் மனநிலை பாதித்த பெண் 30 மணி நேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
ஆந்திர அரசு ஆஸ்பத்திரியில் மனநிலை பாதித்த பெண் 30 மணி நேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய 3 காவலாளிகளை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திரா:
ஆந்திர அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்ற மனநிலை பாதித்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 காவலாளிகளை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் பெற்றோர் அளித்த புகார் மீது அலட்சியமாக நடந்துகொண்ட போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அரசு ஆஸ்பத்திரி
ஆந்திர மாநில தலைநகரான விஜயவாடா பஸ் நிலையம் அருகே அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. மாநிலத்தின் தலை நகரில் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகளும் உள்ளதால் மாநிலம் முழுவதிலுமிருந்து ஏராளமான நோயாளிகள் இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் விஜயவாடா அரசு ஆஸ்பத்திரி 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் விஜயவாடா அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு ஏற்கனவே விஜயவாடா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் வீட்டில் இருந்த இளம் பெண் திடீரென மாயமானார்.
அவரது பெற்றோர் இளம்பெண் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது விஜயவாடா அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் வீட்டிற்கு வருகிறேன் என தெரிவித்தார்.
இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
இந்த நிலையில் இளம்பெண் சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்குள்ள லிப்ட் அருகே ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் 3 காவலர்கள் அவரிடம் நைசாக பேசி லிப்ட் அருகே உள்ள அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 3 பேரும் மது அருந்திவிட்டு இளம் பெண்ணை 30 மணி நேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
ஆஸ்பத்திரிக்கு சென்ற மகள் திரும்பி வராததால் அவரது பெற்றோர் இளம்பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் இளம்பெண் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் அவரை ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் இளம் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை.
போலீஸ் அலட்சியம்
இதுகுறித்து விஜயவாடா போலீசில் இளம் பெண்ணின் பெற்றோர் புகார் செய்தனர். உங்களது மகளுக்கு மன நிலை சரியில்லாததால் அவர் வேறு எங்காவது சென்று இருப்பார். நீங்களே கண்டு பிடித்துக் கொள்ளுங்கள் என போலீசார் அலட்சியமாக தெரிவித்தனர்.
அப்போது இளம் பெண்ணின் பெற்றோர் அவரது செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கே இருக்கிறார் என கண்டுபிடித்து தாருங்கள் என கூறினர். அதற்கும் போலீசார் அலட்சியமாக பதில் அளித்தனர்.
இந்த நிலையில் காவலர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் லிப்ட் அருகே ஆடைகள் கிழிந்த நிலையில் மயக்கமடைந்து இருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இளம்பெண்ணை மீட்டு அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த முன்னாள் முதல்-அமைச்சரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு விஜயவாடா ஆஸ்பத்திரிக்கு வந்து இளம்பெண்ணிடம் நலம் விசாரித்தார். இளம்பெண்ணின் சிகிச்சைக்காக ரூ 5 லட்சம் வழங்கினார்.
மேலும் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் வீடு
இந்த நிலையில் ஆந்திர மாநில மகளிர் நல ஆணையர் வாசு ரெட்டி பத்மா இளம்பெண்ணிடம் விசாரணை நடத்துவதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் கோ பேக் கோ பேக் கூச்சலிட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் ரஜினி உள்துறை அமைச்சர் வனிதா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி விட்டு இளம் பெண்ணின் சிகிச்சை செலவுக்காக ரூ 10 லட்சமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் வீடு வழங்கப்படும் என தெரிவித்தனர்.
3 பேர் போக்சோ சட்டத்தில் கைது
இளம்பெண் பாலியல் பலாத்காரம் குறித்து விஜயவாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து ஆஸ்பத்திரி காவலாளிகள் 3 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
மேலும் இளம் பெண்ணின் பெற்றோர் அளித்த புகார் மீது அலட்சியமாக நடந்துகொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆஸ்பத்திரி தீன் மற்றும் ஆர் எம் ஓ மருத்துவ அலுவலர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு மகளிர் நல ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆந்திர அரசு ஆஸ்பத்திரியில் அங்கு பணிபுரியும் காவலர்களால் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஆந்திரா முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.