கர்நாடகத்தில் அதிகரிக்கும் இணையவழி மோசடி - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
கர்நாடகத்தில் இணையவழி மூலம் தினமும் மோசடி வழக்குகள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இணையவழி மோசடி அதிகரித்து உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியிடமே ரூ.89 ஆயிரத்தை மர்மநபர்கள் இணையம் மூலம் மோசடி செய்து இருந்தனர். நொடி பொழுதில் இந்த மோசடியில் இன்னொருவர் வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி கும்பல் தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றிவிடுகிறது.
இதனால் பணத்தை இழந்தவர்கள் பரிதவிக்கும் நிலையும் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற இணைய மோசடியில் சிக்கி ஏமாறுபவர்கள் புகார் அளிக்க 112 என்ற எண்ணும் போலீஸ் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை கர்நாடகத்தில் ரூ.221 கோடி மதிப்பிலான இணையவழி மோசடி நடந்து உள்ளது. அதில் ரூ.47 கோடி மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சைபர் மோசடி மூலம் ரூ.104 கோடியை பொதுமக்கள் இழந்து உள்ளனர். அதில் ரூ.24 கோடி மட்டுமே மீட்கப்பட்டு உள்ளது.
ஓ.டி.பி. (ஒன் டைம் பாஸ்வேர்ட்) எண் மூலம் ரூ.68 கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது. அதில் ரூ.18 கோடி தான் மீட்கப்பட்டு இருக்கிறது. சமூக வலைத்தளம் மூலம் ரூ.47 கோடி மோசடி நடந்த நிலையில் ரூ.4 கோடி மட்டும் மீட்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு கடந்த 4 ஆண்டுகளில் கர்நாடகத்தில் இணையவழி மோசடி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது சராசரியாக தினமும் ரூ.19 லட்சத்திற்கு மதிப்பிலான இணையவழி மோசடி அரங்கேறி வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.