உக்ரைனுக்கு ரூ.6,000 கோடி ராணுவ உதவி..!! - ஜோ பைடன் அறிவிப்பு
உக்ரைனுக்கு ரூ.6,000 கோடி மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
ரஷியா தொடுத்துள்ள போரை எதிர்கொள்வதற்கு உக்ரைன் போதிய ஆயுதங்கள், தளவாடங்கள் இன்றி தவிக்கிறது.
இந்நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் சுமிஹால் நேற்று வாஷிங்டன் சென்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து, உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6,000 கோடி) ராணுவ உதவியை ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கடந்த வாரமும் இதே அளவிலான உதவியை அமெரிக்கா அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
மேலும், உக்ரைன் அரசின் நடவடிக்கைகளுக்காகவும், சம்பளம் வழங்கவும், சேவைகளை ஆற்றவும் உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,750 கோடி) நிதி உதவியை வழங்குவதாக அமெரிக்க நிதித்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.