உலக சுகாதார மைய இயக்குநரை ‘துளசிபாய்’ என அழைத்த பிரதமர் மோடி..!
உலக சுகாதார மைய இயக்குநர் டெட்ரோஸ் எனது நெருங்கிய நண்பர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காந்திநகர்,
குஜராத்தில் சர்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உலக சுகாதார மைய இயக்குநர் மருத்துவர் டெட்ரோஸ் கெப்ரேயஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது டெட்ரோஸ் பிரதமர் மோடியுடன் உரையாடியபோது தனக்கு குஜராத்தி பெயர் ஒன்றை பட்டப்பெயராக வைக்குமாறு கேட்டார். அதற்கு பிரதமர் மோடி ‘துளசிபாய்’ என டெட்ரோஸை அழைத்தார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரதமர் மோடி.
உலக சுகாதார மைய இயக்குநர் டெட்ரோஸ் எனது நெருங்கிய நண்பர். அவர் தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தது இந்திய ஆசிரியர்கள் தான் என கூறுவார். நான் இன்று இருக்கும் நிலைமைக்கு அவர்கள் தான் காரணம் என தெரிவிப்பார்.
டெட்ரோஸ் என்னிடம் வந்து, நான் குஜராத்தியாக மாறிவிட்டேன். எனக்கு ஒரு பெயர் வையுங்கள் என கேட்டார். நான் அதற்கு அவருக்கு துளசிபாய் என பெயர் வைத்து அழைத்தேன். அதற்கு காரணம் துளசிக்கு அற்புத மருத்துவ குணங்கள் கொண்டவை. நீங்களும் மக்களின் பிணியை போக்கும் மருத்துவர். எங்கள் நாட்டில் துளசியை வழிபடுவார்கள். திருமணத்திற்கு கூட துளசியை பயன்படுத்துவார்கள். நீங்களும் எங்களில் ஒருவராக ஆகிவிட்டீர்கள் என கூறினேன்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, விரைவில் ஆயுஷ் விசாவை இந்தியா விரைவில் அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்தார். இந்த விசாவின் மூலம் வெளிநாட்டவர்கள் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வர முடியும்’ என்றார். மேலும், நாங்கள் ஒரு சிறப்பு ஆயுஷ் ஹால்மார்க் முத்திரையை உருவாக்க உள்ளோம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர ஆயுஷ் உற்பத்தி பொருட்களுக்கு இந்த ஹால்மார்க் அளிக்கப்படும் என்றார்.