பெண் மந்திரிக்காக போக்குவரத்து நிறுத்தம்; சிகிச்சைக்கு சென்ற குழந்தை உயிரிழந்த சோகம்

ஆந்திர பிரதேசத்தில் குழந்தைகள் நல பெண் மந்திரி பேரணிக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டதில் சிகிச்சைக்கு சென்ற 8 மாத குழந்தை உயிரிழந்து உள்ளது.

Update: 2022-04-19 09:24 GMT



ஐதராபாத்,



ஆந்திர பிரதேசத்தில் வசித்து வரும் கணேஷ் மற்றும் ஈஸ்வரம்மா தம்பதிக்கு 8 மாத குழந்தை இருந்தது.  உடல்நிலை சரியில்லாத குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிராம வளர்ச்சி டிரஸ்ட் மருத்துவமனைக்கு இரவில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

அவர்கள் சென்ற ஆட்டோ ரிக்ஷா அனந்தப்பூர் மாவட்டத்தின் கல்யாண்துர்கம் பகுதியில் நடுவழியில் நிறுத்தப்பட்டு உள்ளது.  சமீபத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல பெண் மந்திரியாக நியமிக்கப்பட்ட உஷா ஸ்ரீசரண் என்பவர் பேரணியாக சென்றுள்ளார்.

இதற்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.  இதில் சிகிச்சைக்காக சென்ற கணேஷ் மற்றும் ஈஸ்வரம்மா தம்பதி சிக்கி கொண்டனர்.  இதனால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் குழந்தை உயிரிழந்து உள்ளது.

இதுபற்றி அந்த தம்பதி கூறும்போது, அரைமணி நேரம் தாமதம் ஏற்பட்டதில் குழந்தை உயிரிழந்து உள்ளது.  போலீசாரால் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டதில் நாங்கள் சென்ற ஆட்டோவும் சிக்கி கொண்டது என கூறியுள்ளனர்.  இதனால், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி குழந்தையின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், மாவட்ட போலீசார் நாங்கள் போக்குவரத்து எதனையும் நிறுத்தவில்லை என்று இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளனர்.  இதனை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும் செய்திகள்