“அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களை திருப்பி தர வேண்டும்” - மத்திய அரசுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்
அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களை திருப்பி தர வேண்டும் மத்திய அரசுக்கு சுகதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,050 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் 812 இடங்கள் அதாவது 15% அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டன. வழக்கமாக இரண்டு கட்ட கலந்தாய்வுக்குப் பின், அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதம் உள்ள இடங்களில் மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்ப தரப்பட்டு, அந்த இடங்களுக்கும் சேர்த்து மாநில அளவில் கலந்தாய்வு நடத்தப்படும்.
ஆனால் இந்த ஆண்டு 4 கட்ட கலந்தாய்வுகள் நடத்தப்பட்ட பிறகும், தமிழ்நாட்டு அரசு மருத்துவ கல்லூரிகளில் 24 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ள மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ சேர்க்கைக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி கடைசி தேதி என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது வரை 24 இடங்கள் காலியாக இருப்பதால், அவற்றை மாநில ஒதுக்கீட்டிற்கு திருப்பி தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கடந்த 11 ஆம் தேதி நிலவரப்படி மாநில ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள 18 இடங்கள் வீணாக்கக் கூடாது என்பதால் அவற்றை நிரப்பிக்கொள்ள கலந்தாய்வு நடத்துமாறும் ராதாகிருஷ்ணன் தனது கடிதத்தில் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.