கொரோனா பரவல் அதிகரித்தாலும் அச்சப்பட தேவையில்லை- டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால்
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா மெல்ல மெல்ல அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது குறித்து பேசிய டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கொரோனா சூழல் குறித்து அரசு கண்காணித்து வருகிறது. பள்ளிகளை பொறுத்தவரை தேவைப்பட்டால் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவோம். கொரோனா பாதிப்பால் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது குறைந்துள்ளது. இதனால், மக்கள் பீதி அடைய வேண்டாம்” என்றார்.
டெல்லியில் நேற்று தினசரி பாதிப்பு 299- ஆக பதிவானது. கடந்த இரு தினங்களில் மட்டும் தொற்று பாதிப்பு 118 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 2.49- சதவிகிதமாக உள்ளது.
கொரோனா அதிகரிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை எனத்தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர்கள், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.