மத பேரணி மீது கல் வீசி தாக்குதல் - பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடு இடிப்பு
மத பேரணி மீது கல் வீசி தாக்குதல் நடத்தியவர்களின் வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளாக அந்த வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் ஹர்ஹென் மாவட்டத்தில் இந்து மத பண்டிகையான ராம நவமியையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து மதத்தினர் பேரணியாக சென்றனர். அந்த மதப்பேரணியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. வீடுகளின் மேல் இருந்து கற்களை வீசி சிலர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 6 போலீசார் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால், ஹர்ஹென் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத பேரணி மீது தாக்குதல் நடத்தியதாக இதுவரை 77 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், மத பேரணி மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தியவர்களின் வீடுகள் நேற்று முன் தினம் முதல் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது. வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதால் அதை இடிப்பதாக ஹர்ஹென் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கல்லெறி தாக்குதல் வன்முறையில் ஈடுபட்டவர்களில் ஒருவரின் வீடு இடிக்கப்பட்டது. அந்த வீடு பிரதமர் மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது என தெரியவந்துள்ளது.
ஷஷிகாவாடி பகுதி பிர்லா மெர்க் தெருவில் உள்ள ஹசினா ஃபரூ (வயது 60) என்பவருக்கு சொந்தமான வீட்டை அதிகாரிகள் இடித்துள்ளனர். அந்த வீடு பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதாகும். அந்த வீட்டில் இருந்து மத பேரணியில் சென்றவர்கள் மீது கல்லெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறி அதை அதிகாரிகள் புல்டோசர் மூலம் இடித்துள்ளனர்.
வீடு இடிக்கப்பட்டது தொடர்பாக அதிகாரி கூறுகையில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு மக்கள் குடியிருப்பாக பயன்படுத்தப்படவேண்டும். ஆனால், நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்றுபார்த்தபோது அந்த கட்டிடம் வேறு சிலவற்றிற்காக பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வேறு இடத்தில் வீடு கட்ட அனுமதிகிடைத்துள்ளபோதும் அவர்கள் வீட்டை அரசு நிலத்தில் கட்டியுள்ளனர். இது தொடர்பான வழக்கு தாசில் கோர்ட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வீட்டை அப்புறப்படுத்த தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்’ என்றார்.
வீடு இடிக்கப்பட்டது குறித்து வீட்டின் உரிமையாளர் ஹசினா ஃபரூ கூறுகையில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளியாகும் முன்பே நாங்கள் இந்த இடத்தில் தான் வசித்து வருகிறோம். இது அரசு நிலம் தான். நாங்கள் இங்கு நீண்ட ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு அதிகாரிகள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எங்கள் வீடு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வந்ததால் நாங்கள் வீட்டை கட்டினோம்’ என்றார்.
நிலம் வேறு எங்கோ உள்ளதாக அதிகாரிகள் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஹசினா ஃபரூ கூறுகையில், எங்களுக்கு நிலம் இருந்தால், நாங்கள் ஏன் இங்கு வீடு கட்ட வேண்டும்?. எங்களுக்கு வேறு வீடோ, நிலமோ கிடையாது’ என்றார்.