தடுப்பூசி செலுத்தும் பணியில் வேகம் தேவை - மத்திய சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தல்
தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் எக்ஸ்.இ., வகை வைரஸ் பாதிப்பு சில இடங்களில் கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், நிடி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தீவிரமாக கண்காணிக்கவும், நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி முழுமை அடையும் வகையில், அதை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.