தனது பணிகள் மூலம் பிரதமர் மோடி அரசியல் கலாசாரத்தை மாற்றி விட்டார்- ஜே.பி.நட்டா
பிரதமர் மோடி தனது பணிகள் மற்றும் சமூக திட்டங்கள் மூலம் அரசியல் கலாசாரத்தையே மாற்றி விட்டதாக ஜே.பி.நட்டா பாராட்டினார்.
சிம்லா,
இமாசல பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சிகளின் முன்னேற்பாடுகள் தொடங்கி உள்ளன. அந்தவகையில் 3 நாள் பயணமாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இமாசல பிரதேசம் சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தனது பணிகள் மற்றும் சமூக திட்டங்கள் மூலம் அரசியல் கலாசாரத்தையே மாற்றி விட்டதாக பாராட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், ‘185 கோடி இரட்டை டோஸ் தடுப்பூசியாகட்டும் அல்லது பாகிஸ்தானில் சர்ஜிக்கல் தாக்குதலாகட்டும் அல்லது உக்ரைனில் இருந்து 23 ஆயிரம் இந்தியர்களை மீட்டதாகட்டும், அனைத்து துறைகளிலும் உறுதியுடன் மோடி அரசு செயல்பட்டது’ என்று தெரிவித்தார்.
முந்தைய காங்கிரஸ் அரசுகள் இமாசல பிரதேசத்திடம் இருந்து பறித்துக்கொள்வதிலேயே குறியாக இருந்ததாக குற்றம் சாட்டிய ஜே.பி.நட்டா, ஆனால் பா.ஜனதா அரசோ மாநிலத்துக்கு வழங்குவதையே குறிக்கோளாக வைத்திருப்பதாக தெரிவித்தார். மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய அரசு இமாசல பிரதேசத்தின் சிறப்பு அந்தஸ்தை பறித்ததாகவும், ஆனால் 2014-ம் ஆண்டு மோடி அரசு பதவியேற்றதும் மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதாகவும் ஜே.பி.நட்டா கூறினார்.