ஆந்திர பிரதேசத்தில் தண்டவாளத்தில் கிடந்த கோவில் முன்னாள் தலைவரின் உடல்; செல்பி வீடியோவில் பரபரப்பு தகவல்
ஆந்திர பிரதேசத்தில் கோவில் முன்னாள் தலைவர் தற்கொலைக்கு முன் எடுத்த செல்பி வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சித்தூர்,
ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் குப்பம் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த உடல் ஒன்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அந்த நபர் குப்பம் ரெயில் நிலையத்தில், ரெயில் ஒன்றின் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட பார்த்தசாரதி (வயது 55) என அடையாளம் தெரிய வந்து உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
அவர் குப்பம் கங்கம்மா கோவிலின் முன்னாள் தலைவராக பதவியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் தற்கொலை செய்வதற்கு முன் செல்பி வீடியோ ஒன்றை எடுத்து உள்ளார். அதில், கோவிலின் நிர்வாக தலைவர் பதவியில் இருந்து தவறாக தன்னை நீக்கியுள்ளனர்.
தனது மரணத்திற்கு பத்திரிகையாளர்கள் 3 பேரே காரணம் என தெரிவித்து உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருந்து வந்த பார்த்தசாரதி, கொரோனா பெருந்தொற்றால் கோவிலுக்கு எதனையும் நிறைவேற்ற முடியவில்லை என வீடியோவில் தெரிவித்து உள்ளார்.
அவர் பதவி காலம் முடிய ஒரு மாதம் உள்ள நிலையில், மற்றொரு நபரை தலைவராக அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். அந்த விரக்தியில் அவர் தற்கொலை செய்து இருக்க கூடும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். இதேபோன்று, ரெயில்வே போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.