தமிழகத்தில் 4.5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன - மத்திய அரசு
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் தமிழகத்தில் வீடுகளின் நிலை குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதி மார்ச் 14ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த நிலையில், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை மந்திரி கவுஷல் கிஷோர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
வீடற்றவர்கள் உட்பட அனைத்து தகுதியான நகர்ப்புற குடும்பங்களுக்கும் அனைத்து தட்பவெப்ப நிலைகளையும் தாங்கும் சிறந்த வீடுகளை வழங்குவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவியை வழங்க ‘பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தை (நகர்ப்புறம்)’, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்துகிறது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பித்த திட்ட அறிக்கைகளின் அடிப்படையில், நாடு முழுவதும் 21.03.2022 நிலவரப்படி 115.48 லட்சம் வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
அனுமதி அளிக்கப்பட்ட மொத்த வீடுகளில், 95.13 லட்சம் வீடுகள் கட்டுவதற்காக தயார்படுத்தப்பட்டுள்ளன. 56.33 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் 21.03.2022 அன்று வரை வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச வாரியான நகரங்களின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
பிரதமரின் (நகர்ப்புற) வீட்டுவசதித் திட்டத்தின், கீழ் தமிழ்நாட்டில் 7,27,597 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 4,67,151 வீடுகள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் 15,786 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 6,496 வீடுகள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.