நிஜ ஹீரோ இவர்தான்..! தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றிய போலீஸ்

இந்த மத கலவரத்தில் நான்கு போலீசார் உட்பட குறைந்தது 42 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-04-04 12:25 GMT
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான்  மாநிலம் கரவ்லி நகரில், சனிக்கிழமை மாலை  கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்தது. 

இந்து நாட்காட்டியின் கீழ் புத்தாண்டின் முதல் நாளான  ‘நவ் சம்வத்சர்’ கொண்டாடும் விதமாக கரவ்லி நகரில், முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதி வழியாக மோட்டார் சைக்கிள் பேரணி  நடைபெற்றது. அப்போது மோட்டார் சைக்கிள் பேரணியின் மீது கல் வீசப்பட்டது. 

இதைத் தொடர்ந்து அங்கு பெரும் மத கலவரம் வெடித்தது.  இதனை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டது.

இந்த மத கலவரம் காரணமாக, ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நீடிக்கிறது. நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கையில் பச்சிளம் குழந்தையை ஏந்தியபடி ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொண்டு தப்பித்து ஓடும் போட்டோ பாராட்டுக்களை பெற்றுள்ளது.  

கலவரக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட எரியும் கட்டிடங்களைக் கடந்து குறுகிய சந்துகள் வழியாக அவர் ஓடினார். இந்தப் படத்தை ஷாம்லி எஸ்எஸ்பி சுகிர்தி மாதவ் மிஸ்ரா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றியதற்காக ராஜஸ்தான் காவல்துறையின் கான்ஸ்டபிள் நேத்ரேஷ் சர்மாவை நினைத்து மிகவும் பெருமைப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேத்ரேஷ் சர்மா என்ற கான்ஸ்டபிள், தன்னைச் சுற்றி வீடுகள் எரிந்து கொண்டிருக்கையில், தீயில் மாட்டிக்கொண்ட ஒரு குழந்தையை தன் கைகளில் தூக்கியபடி ஓடி காப்பற்றியுள்ளார்.

இந்த மத கலவரத்தில்  நான்கு போலீசார் உட்பட குறைந்தது 42 பேர் காயமடைந்தனர்.

மளமளவென பற்றி எரியும் தீயில், தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் ஒரு பிஞ்சு உயிரை காப்பாற்ற அவர் பட்டபாடு, நிச்சயம் அந்த போலீசுக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட்..! 
இந்த சம்பவம் குறித்து,  கூடுதல் போலீஸ் டிஜி(நிர்வாகம் மற்றும் சட்டம்  ஒழுங்கு) ஹவா சிங் குமாரியா கூறியதாவது:-

“இந்து புத்தாண்டை முன்னிட்டு சனிக்கிழமை மாலை இந்து அமைப்பினர் மத வழிபாட்டு பைக் பேரணியில் ஈடுபட்டனர். அந்த ஊர்வலம் ஒரு மசூதியை அடைந்தபோது, ​​சிலர் அவர்கள் மீது கற்களை வீசினர். இதனால், மறுபுறம் கல் வீச்சும், தீ வைப்புகளும் நடந்தன. 

அதில் சில இரு சக்கர வாகனங்கள் மற்றும் கடைகள் எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் போது, இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் காயம் அடைந்தனர்.

தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கரவ்லிக்கு 600 போலீசார் கொண்ட கூடுதல் படை அனுப்பப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகளில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தினர்” என்று சம்பவத்தன்று இரவு தெரிவித்தார். 

மேலும் செய்திகள்