வயிற்றுக்குள் மறைத்து தங்கம் கடத்தல்; கேரள வாலிபர் கைது
கத்தாரில் இருந்து கேரளாவுக்கு வயிற்றுக்குள் மறைத்து தங்கம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கத்தார் நாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மலப்புரம் மாவட்ட எஸ்.பி. சுஜித்தாசுக்கு ரகசிய தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில் கரிப்பூர் போலீசார் விமான நிலையத்திற்கு வெளியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணியின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. விசாரணை மேற்கொண்டபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்தார். இதனால் அவரை போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நினைத்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, அவரது வயிற்று குடல் பகுதிக்குள் 4 பாக்கெட்டுகள் இருந்தன. மருத்துவர்கள் உதவியுடன் அதனை வெளியில் எடுத்து பிரித்து பார்த்ததில் தங்கம் பொடியாக உருக்கி வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 870 கிராம் தங்க பொடிகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 40 லட்சம் ரூபாய் ஆகும்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கோழிக்கோடு அடுத்த நாதபுரம் பகுதியை சேர்ந்த இஸ்மாயில்(42) என்பதும், கத்தாரில் இருந்து தங்கத்தை உருக்கி பொடியாக கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பரான இக்பால்(45) என்பவரையும் கைது செய்து, அவரது காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் மலப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.