உக்ரைன் போர் சூழலில் ரஷிய வெளியுறவு மந்திரி இந்தியா வருகை
உக்ரைனுக்கு எதிரான போருக்கு பின் முதன்முறையாக ரஷிய தலைவர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
புதுடெல்லி,
உக்ரைன் நாடு மீது ரஷியா தொடுத்து வரும் போரானது 36வது நாளாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என பல்வேறு நாடுகளும் இந்த போரில் தங்கள் நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகின்றன.
இந்த போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகின்றன. இந்த போரில் இந்தியாவை தங்கள் பக்கம் கொண்டு வர அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளும் மற்றும் ரஷியாவும் முயற்சித்து வருகின்றன.
இந்த நிலையில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லவ்ரவ் இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி, அவர் இன்று டெல்லி வந்தடைந்து உள்ளார்.
இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி அரிந்தம் பக்ஷி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவுக்கு அலுவல்பூர்வ முறையில் வருகை தந்துள்ள ரஷிய கூட்டமைப்பின் வெளியுறவு மந்திரி செர்கே லவ்ரவை வரவேற்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
சீனாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின் லவ்ரவ் மேற்கொள்ளும் இந்திய பயணம் இதுவாகும். இதனையடுத்து, மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை, லவ்ரவ் நாளை சந்தித்து பேச இருக்கிறார்.
இந்தியாவுக்கு வெளிநாட்டு மந்திரிகளின் வருகை சமீப நாட்களாக அதிகரித்து உள்ளது. சீன வெளியுறவு மந்திரி வாங் யீ கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்து சென்றார். இங்கிலாந்து வெளியுறவு மந்திரி எலிசபெத் டிரஸ் இன்று மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லவ்ரவ் இன்று இந்தியாவுக்கு வந்துள்ளார்.