பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி, மனநிறைவு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி மற்றும் மனநிறைவடைவதாக இருந்தது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தி.மு.க. அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்கு பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:-
எனது மூன்றாவது டெல்லி பயணம் இது. பிரதமரை இன்று மதியம் நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். சந்திப்பதற்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்த போது உடனடியாக அதற்கு நேரம் ஒதுக்கி சந்தித்தமைக்காக பிரதமருக்கு முதலில் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினேன். அந்த கோரிக்கைகளில் இருக்கக்கூடிய முக்கியத்துவத்தை பிரதமருக்கு நான் தெளிவாக எடுத்துரைத்தேன்.
அப்போழுது பொறுமையாக அனைத்தையும் கேட்ட பிரதமர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் உறுதியளித்துள்ளார். பிரதமர் அளித்த உறுதிமொழிக்கு நான் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரதமருடனான இந்த சந்திப்பு மகிழ்ச்சிக்குரியதாகவும், மனநிறைவடைவதாகவும் அமைந்திருந்தது.
பிரதமரிடம் நான் அளித்த கோரிக்கை மனுவில் உள்ள சில குறிப்பிட்ட முக்கியமான கோரிக்கைகளை நான் தற்போது கூற விரும்புகிறேன்.
இலங்கையில் தற்போது நடந்து வரும் அசாதாரண சூழ்நிலையை நாம் அறிவோம். பொருளாதார நெருக்கடியில் சிக்கி வேதனையில் தவித்துக்கொண்டிருக்கக்கூடிய இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உதவி செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
தேவையான அத்தியாவசிய பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் அவர்களுக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் நான் முன்வைத்துள்ளேன்.
அதேநேரத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையும், அரசியல் உரிமையும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளேன்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை குறித்தும் வலியுறுத்தியுள்ளேன். கச்சத்தீவு மீட்பு குறித்தும் கோரிக்கை வைத்துள்ளேன்.
உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களின் மருத்துவ படிப்பை இந்தியாவில் தொடர அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளேன்.
காவேரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி தரக்கூடாது என்ற கோரிக்கையும் பிரதமரிடம் முன்வைத்துள்ளேன்.
மாநிலங்களுடன் மேல்வரிகள், கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயை பகிர்ந்து அளிக்க வேண்டும். ஜூன் 2022-க்கு பின்பும் ஜிஎஸ்டி இழப்பை தொடர்ந்து வழங்க வேண்டும்.
நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தை தமிழ்நாட்டில் பட்டியல் மற்றும் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன் வைத்துள்ளேன்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் சட்ட முன்மொழிவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி 2-வது முறை தமிழக கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அதை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் கவர்னர் இன்னும் தாமதம் செய்கிறார்.
இந்த சட்ட முன்மொழிவுக்கு உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசை நான் கேட்டுக்கொண்டுள்ளேன். தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் தமிழகத்திற்கு வரவேண்டிய வெள்ள நிவாரண நிதி குறித்தும் வலியுறுத்தியுள்ளேன்.
காவல், தீயணைப்பு துறையை நவீனபடுத்த நிதி ஒதுக்கீடு கோரியுள்ளேன். பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்திடம் தமிழகத்தில் அமையவிருக்கும் புதிய விமான நிலையங்கள் அமைத்திட தேவைப்படும் பாதுகாப்புத்துறை வசம் உள்ள நிலங்களை ஒதுக்கித்தர வேண்டும் என்றும் கேட்டுள்ளேன்.
தமிழ்நாட்டில் டிஆர்டிஓ ஆய்வுக்கூடம் அமைக்கப்பட வேண்டும். சேலம் இரும்பு ஆலையின் மிகை நிலத்தை பாதுகாப்புத்தொழில் பூங்காவிற்கு வழங்க வேண்டும்.
பாதுகாப்புத்துறை தொடர்பாக ஒன்றிய அரசு சில திட்டமிடுதல்களை செய்து வருகிறது. ஒன்றிய அரசு அமைக்க திட்டமிட்டுள்ள ஏவியேஷன் டெக்னாலஜி ஹப் கோவையில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.
சென்னை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றவும், சென்னை - மதுரவாயில் உயர்மட்ட சாலையை ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்கவும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
தாம்பரம் - செங்கல்பட்டு வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்பட வேண்டும். மாநிலத்தில் நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டங்களை விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன்.
எனது இன்றைய சந்திப்பை பொறுத்தவரை பிரதமர், உள்துறை மந்திரி, பாதுகாப்புத்துறை மந்திரி, நெடுஞ்சாலைத்துறை மந்திரிகளுடனான சந்திப்புகள் மன நிறைவு அளிப்பதாக அமைந்திருந்தது.
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத்துறையில் அதிக திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
நாட்டின் பாதுகாப்புத்துறை தொழிற்சாலை துவங்க தமிழ்நாடு தான் உகந்த மாநிலமாக திகழ்வதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறினார்.
நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், வர்த்தக உணவுத்துறை மந்திரி பியூஸ் கோயலை நாளை நான் சந்திக்க உள்ளேன். அவர்களிடமும் தமிழகத்திற்கான கோரிக்கைகளை நான் எடுத்துவைப்பேன்.
டெல்லி மாடல்ஸ்கூல் மருத்துவமனை ஒன்றை நான் நாளை பார்வையிட உள்ளேன். அப்போது, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் என்னுடன் வருவதாக சொல்லியுள்ளார். அவருடன் சேர்ந்து நான் பார்வையிட உள்ளேன்.
அதனை தொடர்ந்து ஏப்ரல் 2-ம் நாள் மாலை அண்ணா-கலைஞர் அறிவாலைய திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது’ என்றார்.