தேவையற்ற பழைய பொருட்களை விற்றதில் ரூ.530.34 கோடி வருவாய்; மத்திய ரெயில்வே
நடப்பு நிதியாண்டில் தேவையற்ற பழைய பொருட்களை விற்றதில் மத்திய ரெயில்வேக்கு ரூ.530.34 கோடி வருவாய் கிடைத்து உள்ளது.
புதுடெல்லி,
மத்திய ரெயில்வே தனது ஒவ்வொரு மண்டலம், பணிமனை மற்றும் ரெயில்களை நிறுத்தும் இடம் ஆகியவற்றில் உள்ள தேவையற்ற பழைய பொருட்களை நீக்குவது என்ற நோக்கில் ஜீரோ ஸ்கிராப் மிஷன் என்ற பெயரிலான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மத்திய ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நடப்பு நிதியாண்டில் தேவையற்ற பழைய பொருட்களை விற்ற வகையில், மத்திய ரெயில்வேக்கு ரூ.530.34 கோடி வருவாய் கிடைத்து உள்ளது என தெரிவித்து உள்ளது. இதற்கு முன்பு கிடைத்த தொகையை விட இது 35.48% அதிகம் ஆகும்.
இதன்படி, ஒவ்வொரு மண்டலம், பணிமனை மற்றும் ரெயில்கள் நிறுத்துமிடத்தில் உள்ள பழைய பெட்டிகள், கைவிடப்பட்ட பெட்டிகள், என்ஜின்கள் மற்றும் பிற ரெயில் சார்ந்த பொருட்கள் விற்கப்பட்டு உள்ளன.
இந்த பழைய பொருட்களை விற்றதில் கிடைத்த வருவாய் இதுவரையில் கிடைத்தவற்றை விட மிக அதிகம். இதனால், நிதியாண்டு 2021-22ல் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.400 கோடி என்ற இலக்கை காட்டிலும் மத்திய ரெயில்வே கூடுதலாக விற்பனை செய்து வருவாய் ஈட்டியுள்ளது.