தேர்தல் குறித்து எங்களுக்கு பயமில்லை - அமித்ஷா பேச்சு
தேர்தல் குறித்து எங்களுக்கு பயமில்லை என்று நாடாளுமன்றத்தில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி மாநகராட்சி கடந்த 2011-ம் ஆண்டு வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சி என மூன்றாக பிரிக்கப்பட்டது. இதற்கிடையில், 3 மாநகராட்சிகளையும் மீண்டும் ஒன்றாக இணைப்பதற்காக டெல்லி மாநகராட்சி திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.
இந்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று பின்னர் டெல்லி மாநகராட்சி திருத்த மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், தேர்தல் குறித்து எங்களுக்கு பயமில்லை. தேர்தல் குறித்து பயம் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றியை ரத்து செய்து அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. உடனடியாக, நாடாளுமன்றத்தில் வாக்களிக்க உரிமையில்லாத ஒரு பிரதமர் நாட்டின் ஜனநாயக உரிமைகளை பறித்துக்கொண்டு அவசரநிலையை பிரகடனம் செய்தார். இது தான் பயம்.
தேர்தல் முடிவுகள் குறித்த அச்சத்தால் தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாக (டெல்லி மாநகராட்சி தேர்தல்) கூறிவரும் சிலரே தேர்தல் குறித்து பயப்படுகின்றனர். வெற்றிபெற்றுவிடுவோம் என்று நம்பிக்கையிருந்தால் தேர்தல் இப்போதே நடைபெற வேண்டும் என ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் நல்ல பணிகளை செய்தால் 6 மாதங்கள் கழித்தாலும் நீங்கள் வெற்றிபெறலாம்’என்றார்.