அடுத்தடுத்து திருப்பம்...! இந்தியா விரையும் உலக நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள்
ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி நாளை இந்தியா வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா 35-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
இதற்கிடையில், இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என பல்வேறு நாடுகளும் இந்த போரில் தங்கள் நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகின்றன.
குறிப்பாக, இந்த போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகின்றன.
இந்த போரில் இந்தியாவை தங்கள் பக்கம் கொண்டு வர அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளும் மற்றும் ரஷியாவும் முயற்சித்து வருகின்றன.
இதற்கிடையில், உக்ரைன் போரில் ஐநா சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா ரஷியாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தின. ஆனால், ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
உக்ரைன் விவகாரத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் முக்கிய தலைவர்கள் இந்தியா வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், இந்திய பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை புரிந்துகொள்ள முடிகிறது என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார்.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடந்த 19-ம் தேதி இந்தியா வந்தார். ஜப்பான் குவாட் அமைப்பில் உறுப்பினராக உள்ளது. புமியோ கிஷிடா இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது உக்ரைன் விவகாரத்தில் இந்தியா ரஷியா மீது கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ இந்தியாவுக்கு வந்தார். அவரது பயணம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நடைபெற்றது. இந்தியா வந்த வாங் யீ உக்ரைன் விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கருடன் ஆலோசனை நடத்தினார்.
அதேவேளை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரான தலீப் சிங் இன்று இந்தியா வர உள்ளர். அவர் உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க இந்தியாவை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலீப் சிங் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி எலிசபெத் ட்ரூஸ் நாளை இந்தியா வர உள்ளார். அவர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசிக்க உள்ளார்.
இந்நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவும் நாளை இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கரை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது உக்ரைன் விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து, ரஷிய வெளியுறவுத்துறை மந்திரிகள் ஒரேநாளில் இந்தியாவுக்கு வருவது உலக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.