மேகதாது அணை பிரச்சினை: கர்நாடக முதல்-மந்திரி டெல்லி பயணம்
கர்நாடக முதல்-மந்திரி மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக மத்திய மந்திரியை சந்தித்து பேச இருக்கிறார்.
பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மேகதாது அணை திட்டம் உள்பட மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண அரசு முயற்சி செய்து வருகிறது. இதில் சட்ட சிக்கல்கள் எழுந்துள்ளதால் கோர்ட்டு மூலம் தீர்க்க வேண்டியுள்ளது. இந்த நதிநீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து விவாதிக்கவும், ஆலோசனை நடத்தவும் நான் ஏப்ரல் முதல் வாரத்தில் டெல்லி செல்கிறேன். அங்கு மத்திய ஜல்சக்தித்துறை மந்திரியை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.
ரெயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படும். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதால் கர்நாடகம் மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது.
கர்நாடகத்தை ஒரு திட்டமிட்ட மாநிலமாக மாற்றுவதற்கான வலுவான அடித்தளம் போடப்படும். பட்ஜெட்டில் அறிவித்துள்ளது போல் தொழில்துறைக்கு அதிக ஊக்கம் தரப்படும். முதலீடுகளை ஈர்க்க நிலத்தை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பிற பணிகள் நடைபெற்று வருகிறது. வட கர்நாடகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.