பிரதமர் மோடியை சந்திக்க விரும்பிய சீன வெளியுறவுத்துறை மந்திரி - மறுப்பு தெரிவித்த மத்திய அரசு

இந்திய பிரதமர் மோடியை சீன வெளியுறவுத்துறை மந்திரி சந்திக்க விரும்பியதாகவும் இந்த சந்திப்புக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-03-27 16:24 GMT
புதுடெல்லி,

இந்தியா-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது.

இந்த மோதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்தது. மேலும், இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன. இதனை தொடர்ந்து எல்லையில் இருந்து படைகளை விலக்கிக்கொள்வது குறித்து இந்தியா - சீனா இடையே ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

ஆனாலும், பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாததால் எல்லையில் இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அறிவிக்கப்படாத திடீர் பயணமாக சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தார். கல்வான் மோதலுக்கு பின்னர் சீன மந்திரி இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும். 

இந்த பயணத்தின் போது வாங் யீ இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் கடந்த வெள்ளிக்கிழமை வாங் யீ இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு சீனா புறப்பட்டார்.

இந்நிலையில், இந்த பயணத்தின் போது சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ இந்திய பிரதமர் மோடியை சந்திக்க விரும்பியுள்ளார். ஆனால், வாங் யீ-யின் விருப்பத்தை மத்திய அரசு நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லையில் இருந்து படைகள் திரும்பப்பெறாத நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவுக்கு சென்றுவிட்டதால் இந்த சந்திப்பு நடைபெறாது என சீன வெளியுறவுத்துறை மந்திரியிடம் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை மந்திரி கோரிக்கை விடுத்த நிலையில் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சம்பவம் இருநாட்டு உறவில் தொடர்ந்து விரிசல் உள்ளது என்பதை காட்டுவதாக உள்ளது.  

மேலும் செய்திகள்