ரூ.21 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்க 5 மாநில அரசுகள் ஒப்புதல் தரவில்லை - மத்திய அரசு தகவல்

ரூ.21 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்க 5 மாநில அரசுகள் ஒப்புதல் தரவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-03-24 23:20 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-

மிசோரம், மேற்கு வங்காளம், சத்திஸ்கார், ராஜஸ்தான், மராட்டியம், கேரளா, ஜார்கண்ட், பஞ்சாப், மேகாலயா ஆகிய 9 மாநிலங்கள், தங்கள் மாநிலத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கான பொது ஒப்புதலை வாபஸ் பெற்று விட்டன.

இதற்கிடையே, பா.ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் மராட்டியம், பஞ்சாப், சத்திஸ்கார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள வங்கி மோசடிகள் நடந்துள்ளன.

ஆனால், அந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க மேற்கண்ட மாநில அரசுகள் ஒப்புதல் அளிக்காமல் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 128 வேண்டுகோள் கடிதங்கள் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை. இதனால், அந்த வழக்குகளில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்க முடியாத நிலை நிலவுகிறது. மராட்டிய மாநில அரசிடம் மட்டும் 101 வேண்டுகோள் கடிதங்கள் நிலுவையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்