மதிய உணவு திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் - மத்திய அரசுக்கு சோனியா வலியுறுத்தல்

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட மதிய உணவு திட்டத்தை மீண்டும் தொடங்குமாறு மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-03-23 19:01 GMT
புதுடெல்லி, 

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பல்வேறு அலுவல்கள், திட்டங்கள், செயல்பாடுகள் தடைபட்டன. அந்தவகையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மதிய உணவும் நிறுத்தப்பட்டது.

இந்த திட்டத்தை மீண்டும் தொடங்குமாறு மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டு உள்ளார். மக்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தின்போது இந்த பிரச்சினையை எழுப்பி அவர் பேசினார்.

அப்போது சோனியா கூறியதாவது:-

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மாணவ-மாணவிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். ஏனெனில் தொற்று பரவும்போது முதலில் மூடப்படுவதும் பள்ளிகள்தான், கடைசியாக திறக்கப்படுவதும் பள்ளிகள்தான்.

பள்ளிகள் அடைக்கப்பட்டதால், மதிய உணவும் நிறுத்தப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக கொரோனா காலத்தில் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால் இது சமைத்த, ஊட்டச்சத்து மிகுந்த உணவுக்கு ஈடாகாது.

கொரோனா கட்டுக்குள் வரத்தொடங்கியதால் மாணவர்கள் தற்போது மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பி வருகின்றனர். இப்போதுதான் அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு அதிகமாக தேவை.

அத்துடன் கொரோனாவால் பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவர்களையும் மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பச்செய்ய மதிய உணவு திட்டம் உதவும். எனவே பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும்.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மத்தியில் 2015-16-ம் ஆண்டில் இருந்து ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உள்ள அங்கன்வாடிகளில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சமைத்த உணவு வழங்குவதை மீண்டும் தொடங்கவும் வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்