மேகதாது விவகாரம்: தீர்மானம் நிறைவேற்றி குழப்பத்தை ஏற்படுத்த தமிழகம் முயற்சி - எடியூரப்பா குற்றச்சாட்டு
மேகதாது விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றி குழப்பத்தை ஏற்படுத்த தமிழகம் முயற்சி செய்வதாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் மேகதாது குறித்த விவாதத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-
மேகதாது திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தை நம்பி நாம் இல்லை. நீர், மொழி, நிலம் பிரச்சினையில் அனைத்துக்கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன.
மேகதாது திட்ட விஷயத்தில் மத்திய அரசுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கர்நாடகத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தையும் அவர் கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார்.
கர்நாடகத்தின் உரிமையில் தமிழகம் குறுக்கீடு செய்கிறது. இவ்வாறு பலமுறை தமிழகம் செய்துள்ளது. பிரதமரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உடனே சந்தித்து மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற வேண்டும். மத்திய ஜல்சக்தித்துறை மந்திரியையும் சந்தித்து பேச வேண்டும். கர்நாடக சட்டவிரோதமாக அனுமதி கேட்கவில்லை.
நமது உரிமையை பெறவே அனுமதி கேட்கிறோம். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. மேலும் சட்டசபையில் தமிழக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.