அதிருப்தி தலைவர்களுடன் சோனியா சந்திப்பு கருத்து வேறுபாடுகளை களைய நடவடிக்கை
அதிருப்தி தலைவர்களுடன் சோனியா காந்தி பேசியது என்ன என்று தெரியவரவில்லை.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தியின் தலைமைக்கு எதிராக குலாம்நபி ஆசாத், கபில் சிபல், மணிஷ் திவாரி, முகுல் வாஸ்னி, ஜிதின் பிரசாதா ஆனந்த் சர்மா, பி.ஜே.குரியன், ரேணுகா சவுத்ரி உள்ளிட்ட 23 தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர்.
கட்சியில் முழு நேர தலைவர் நியமிக்க வேண்டும், சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து அவர்கள் ஒன்றுசேர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இப்போது 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பின்னர் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 23 அதிருப்தி தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்து பேசினார்.
அதன் தொடர்ச்சியாக சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் 23 அதிருப்தி தலைவர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நேற்று சந்தித்துப் பேசினார்கள்.
அதிருப்தி குழுவில் இடம்பெற்றுள்ள பிற தலைவர்களையும் வரும் நாட்களில் சோனியா காந்தி சந்திப்பார் என தகவல்கள் கூறுகின்றன. அதிருப்தி தலைவர்களுடன் சோனியா காந்தி பேசியது என்ன என்று தெரியவரவில்லை. இருந்தபோதும், கட்சியில் உள்ள கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து கட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க சோனியா காந்தி திறந்த மனதுடன் இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.