கேரளாவில் காணாமல் போன தந்தை-மகள் சடலமாக மீட்பு..!
கேரளாவில் காணாமல் போன தந்தை மற்றும் மகள் இருவரும் அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கேரளா,
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாம்பாடி பகுதியில் வசிப்பவர் பினீஸ் (45). இவரது மகள் பார்வதி (16). இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் தனது வீட்டிலிருந்து உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி ஸ்கூட்டரில் சென்றார்கள். பின்பு இவர்களிடமிருந்து எந்த விதமான தகவலும் தெரியவில்லை.
இதனால் பதற்றமடைந்த மனைவி பலமுறை போன் மூலம் தொடர்பு கொண்டும் போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதைதொடர்ந்து மனைவி பாம்பாடி காவல் நிலையத்தில் கணவனையும் மகளையும் காணவில்லை என புகார் தெரிவித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் இடுக்கி மாவட்டம் கல்லார் குட்டி டேம் அருகில் இவர்களுடைய ஸ்கூட்டர் நின்றுகொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் கவனித்தனர். உடனடியாக அவர்கள் அடிமாலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக பாம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு போலீசார் உதவியுடன் விரைந்து வந்து அணையில் குதித்து தேடினார்கள். அப்போது இருவரும் அணையின் ஒரு பகுதியில் இறந்த நிலையில் காணப்பட்டார்கள். போலீசார் இவர்களது உடலை மீட்டு இடுக்கி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. மேல் விசாரணை நடத்தி வருவதாக பாம்பாடி போலீசார் தெரிவித்தனர்.