’அசானி புயல்’ அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்- இந்திய வானிலை ஆய்வு மையம்
’அசானி புயல்’ அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புதுடெல்லி,
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மேலும் வலுப்பெற்றது.
தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் அந்தமான்- நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும். அதன்பின்னர் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலு பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு ‘அசானி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமான்- நிக்கோபர் தீவை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால், அப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தற்போதைய வானிலை செயற்கைக்கோள் நிலவரப்படி ‘அசானி’ புயல் வடக்கு-வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மியான்மரின் தென்கிழக்கு வங்காளதேச கடலில் 22-ந்தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.