ரூ.6 கோடி மோசடி புகார்; அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என கெலாட்டின் மகன் மறுப்பு

ராஜஸ்தான் முதல்-மந்திரியின் மகன் பல கோடி ரூபாய் மோசடி என்ற தன் மீது கூறப்பட்ட புகாரை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என கூறியுள்ளார்.

Update: 2022-03-20 08:33 GMT


ஜோத்பூர்,


ராஜஸ்தான் முதல்-மந்திரியான காங்கிரசை சேர்ந்த அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்.  இவர் மீது, மராட்டியத்தின் நாசிக் நகரை சேர்ந்த நபர் ஒருவர் வைபவ் பல கோடி ரூபாய் மோசடி புகார் கூறியுள்ளார்.

இதுபற்றி கங்காபூர் காவல் நிலைய மூத்த காவல் ஆய்வாளர் ரியாஸ் ஷேக் கூறும்போது, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 16 பேருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.  சுஷில் பாட்டீல் என்பவர் அளித்த பண மோசடி புகாரின் பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

நடந்த சம்பவம் பற்றி சுஷில் கூறும்போது, 2018ம் ஆண்டு சச்சின் வல்ரே என்ற காங்கிரஸ்காரர் என்னை தொடர்பு கொண்டார்.  அவர், ராஜஸ்தான் முதல்-மந்திரி கெலாட்டுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.  அதனால், அரசு வழங்க கூடிய ஒப்பந்தங்களை நான் மேற்பார்வை செய்து வருகிறேன் என என்னிடம் கூறினார்.

இதன்பின்பு அவர் கூறியதன்படி, அரசு ஒப்பந்தங்களை கையாளும் தனியார் நிறுவனம் ஒன்றில் பார்ட்னராக சேர்ந்தேன்.  ரூ.6.8 கோடி அதில் முதலீடும் செய்தேன்.  எனது முதலீட்டிற்கான வருமானம் வராதபோது, அதுபற்றி அவர்களிடம் கேட்டேன்.

இதனையடுத்து, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டுக்கும், எனக்கும் இடையே வீடியோ கால் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  அதில், எனது முதலீட்டிற்கான வருவாய் அளிக்கப்படும் என வைபவ் உறுதி கூறினார்.  எனினும், அதில் பலனில்லை என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து சுஷில், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளேன்.  எனக்கு அச்சுறுத்தல் வரும் என அஞ்சுகிறேன்.  அதனால், எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அரசையும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் வைபவ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, 2023ம் ஆண்டில் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  அதுவரை குற்றச்சாட்டுகள், எதிர் குற்றச்சாட்டுகள், பொய்யான எப்.ஐ.ஆர்.கள் போடுவது தொடரும்.  இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் அடிப்படையற்றவை.  இதுபோன்ற பொய்யான வழக்குகளை கவனத்தில் கொள்ளாமல், நாங்கள் மக்கள் நலனிற்காக தொடர்ந்து பணியாற்றி வருவோம் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்