இன்னும் சில ஆண்டுகளில் காஷ்மீரிலிருந்து துணை ராணுவப்படை விலக்கி கொள்ளப்படும்; உள்துறை மந்திரி அமித்ஷா

காஷ்மீரில் நம்மால் முழு அமைதியை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறினார்.

Update: 2022-03-19 14:58 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள மவுலானா ஆசாத் மைதானத்தில் இன்று நடைபெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ்(சிஆர்பிஎப்) படையின் 83வது எழுச்சி நாள் அணிவகுப்பில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்துகொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது:-

டெல்லியில் உள்ள சிஆர்பிஎப் தலைமையகத்திற்கு வெளியே, அணிவகுப்பு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானால் கட்டவிழ்க்கப்பட்ட பயங்கரவாதத்தை மத்திய படைகள் கட்டுப்படுத்தி உள்ளன. இது ஏற்பட்ட மிகப்பெரிய செயலாக பார்க்கப்படுகிறது. 

இன்னும் சில ஆண்டுகளில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும், நக்சல்கள் இருக்கும் பகுதிகளிலும், மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு(துணை ராணுவப்படை) வேலை இருக்காது. அங்கு நம்மால் முழு அமைதியை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அப்படி நடந்தால் அதற்கான மொத்த பெருமையும் துணை ராணுவப் படையினருக்கே சேரும்.

காஷ்மீரில் இருக்கும் பலத்த பாதுகாப்பு நீக்கி கொள்ளப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். அதற்கான கால அளவையும் குறிப்பிட்டுள்ளோம்.

துணை ராணுவப் படையின் நான்கில் ஒரு பகுதியினர், காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க  பாதுகாப்பு பணியில் உள்ளனர். அவர்களுடன் ஜம்மு காஷ்மீர் போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர், இந்தோ திபெத்  எல்லை போலீசார், இந்திய ராணுவம் மற்றும் மத்திய படை போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் தங்களுடைய தீர்க்கமான கட்டுப்பாட்டில்  பயங்கரவாதத்தை வைத்திருப்பது என்பது இந்திய அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதால் ஏற்பட்ட மிகப்பெரிய சாதனையாகும்.

காஷ்மீரில் ஜனநாயகம் செழுத்திட, அடிமட்ட அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இங்கு ரூ.33,000 கோடி மதிப்பீட்டில் முதலீடுகள் செய்யப்பட உள்ளன.இங்குள்ள உள்ளாட்சி நிர்வாகம் ஊழலுக்கு எதிராக சிறப்பாக 
செயல்படுகிறது. மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்