‘பெகாசஸ்’ உளவு மென்பொருளை ரூ.25 கோடிக்கு விற்க முன்வந்தனர் மம்தா பானர்ஜி திடுக்கிடும் தகவல்

‘பெகாசஸ்’ மென்பொருளை தயாரித்த என்.எஸ்.ஓ. நிறுவனம் அதை விற்பதற்காக ஒவ்வொரு மாநிலத்தையும் அணுகியது.

Update: 2022-03-17 18:58 GMT
Image Courtesy: PTI (file)

கொல்கத்தா, 

இந்தியாவில் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருளை பயன்படுத்தி, 300-க்கு மேற்பட்டோரின் செல்போன் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம், சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் உள்ளது.

இந்தநிலையில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

‘பெகாசஸ்’ மென்பொருளை தயாரித்த என்.எஸ்.ஓ. நிறுவனம் அதை விற்பதற்காக ஒவ்வொரு மாநிலத்தையும் அணுகியது. 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு வங்காள போலீசையும் அணுகியது. ரூ.25 கோடிக்கு மென்பொருளை விற்க முன்வந்தது.

இந்த தகவல் எனக்கு தெரிய வந்தபோது, அது தேவையில்லை என்று கூறிவிட்டேன்.

‘பெகாசஸ்’ மென்பொருளை நாட்டின் பாதுகாப்புக்காக பயன்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அதை வாங்கிய மத்திய அரசு, அரசியல் காரணங்களுக்காக நீதிபதிகள், அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக பயன்படுத்தி இருப்பதை ஏற்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அரசு பதவி வகித்தபோது, அந்த அரசு ‘பெகாசஸ்’ மென்பொருளை விலைக்கு வாங்கியதாக நேற்று முன்தினம் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். ஆனால் அதை சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் நேற்று மறுத்தார்.

மேலும் செய்திகள்