மராட்டியத்தில் 4 ஆண்டுகளில் 3 லட்சம் மரங்களை வெட்டி தள்ளிய அவலம்
மராட்டியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.21.95 கோடி மதிப்பிலான 3 லட்சம் மரங்களை சட்டவிரோத கும்பல் வெட்டியுள்ளது.
புனே,
மராட்டியத்தின் சட்ட மேலவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சிவசேனா உறுப்பினர் மணீஷா கயாண்டேவின் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், மராட்டியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 171 மரங்கள் சட்டவிரோத வகையில் வெட்டப்பட்டு உள்ளன.
அவற்றின் மதிப்பு ரூ.21.95 கோடி ஆகும். இந்த காலகட்டத்தில் 48,893 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில், 1,435 தீவிர குற்றங்களாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. சட்டவிரோத மரம் வெட்டுதல் மற்றும் மர கடத்தலுக்காக 4 ஆண்டுகளில் 991 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.
இதேபோன்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், மும்பை புறநகர் மாவட்டம், கடந்த 2021ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையில் 1.08 சதுர கி.மீ. தொலைவுக்கு மாங்குரோவ் காட்டு பகுதிகள் அழிந்து விட்டன என்று தெரிவித்து உள்ளார்.
காடுகளில் மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த பகுதியில் மழை பொழிவு இருக்கும். குடிநீர் தேவை பூர்த்தியாவதுடன், குளிர்ச்சியான சூழல், பருவகால சமநிலை ஆகியவற்றை நிலைப்படுத்தும் காரணிகளில் ஒன்றாக மரங்கள் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனினும், மனிதர்களின் சுயநல தேவைக்காக இதுபோன்று மரங்கள் வெட்டப்படுவதும், கடத்தப்படுவதும் வருங்கால தலைமுறையினருக்கு வேதனை அளிக்க கூடிய விசயம் ஆகும்.