டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் சகோதரருக்கு அரசுப்பணி
டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவின் சகோதரருக்கு அரசுப்பணி ஆணையை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார்.
புதுடெல்லி,
குடியுரிமை திருத்தச்சட்ட ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே தலைநகர் டெல்லியில் 2020 பிப்ரவரி 23-ம் தேதி வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 53 பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறையில் உளவுத்துறையில் பணியாற்றி வந்த காவலர் அங்கித் சர்மா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட அங்கித் சர்மாவின் உடல் சந்த் பாக் என்ற பகுதியில் உள்ள ஒரு குப்பை மேட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அவர் பல முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொலையில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலரான தாகீர் உசேன் குற்றஞ்சாட்டப்பட்டார். இதனை தொடர்ந்து அவரை ஆம் ஆத்மியில் இருந்து கட்சி தலைவர் கெஜ்ரிவால் நீக்கினார். பின்னர் தலைமறைவாக இருந்த தாகீர் உசேனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அங்கித் சர்மாவின் சகோதரருக்கு கல்வித்துறையில் அரசு வேலை வழங்கியதற்கான பணி ஆணையை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வழங்கினார்.