தலைக்கு ரூ.18 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டு தம்பதி போலீசில் சரண்
தலைக்கு 18 லட்ச ரூபாய் சன்மானமாக அறிவிக்கப்பட்ட கணவன் - மனைவி நக்சலைட்டு இன்று போலீசில் சரண் அடைந்தனர்.
மும்பை,
சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, நக்சலைட்டுகள் அவரவர் செய்த குற்றங்களின் அடிப்படையில் தேடப்படும் நக்சலைட்டுகளின் தலைக்கு அரசு சார்பில் லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிக்கப்படுவதுண்டு.
அந்த வகையில், மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்திவந்த இரு நக்சலைட்டுகளின் தலைக்கு மொத்தம் ரூ.18 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. தீபக் இஷ்டம் மற்றும் ஷம்பதி ஆலம் ஆகிய இரு நக்சலைட்டுகளும் கணவன் - மனைவி ஆவர். தம்பதிகளான இருவரும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அந்த இருவரையும் தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தம்பதியான தீபக் இஷ்டம் மற்றும் ஷம்பதி ஆலம் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு இன்று போலீசில் சரண் அடைந்தனர்.