நாடு முழுவதும் 16 லட்சம் சைபர் தாக்குதல்கள் - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
2021 முதல் 2022 பிப்ரவரி வரை 16 லட்சம் சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
சைபர் தாக்குதல்கள் நாடாளுமன்றதில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், நாடு முழுவதும் கடந்த 2021 ஆம் ஆண்டில் 14 லட்சத்து 2 ஆயிரத்து 809 சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதே போல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை, 2 லட்சத்து 12 ஆயிரத்து 485 சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சைபர் தாக்குதல்களை தடுப்பதற்கான விதிமுறைகள் குறித்த காணொலி வீடியோக்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் மத்திய அரசு மூலம் நடத்தப்பட்டு வருவதாகவும், சைபர் குற்றங்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.