ஆன்லைன் வகுப்புகளை தொடங்கிய உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகங்கள்...!!

உக்ரைனில் படித்து வந்த இந்திய மாணவர்களுக்கு புதிய நம்பிக்கை வெளிச்சமாக அந்நாட்டின் பல மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன.

Update: 2022-03-16 01:46 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு, அந்நாட்டில் மருத்துவம் பயின்று வந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கும் பேரிடியாக அமைந்தது. உயிர் பிழைத்தால் போதும் என்று தாயகத்துக்கு தப்பி வரவேண்டிய நிலையில் படிப்பு அந்தரத்தில் நின்று போனது. மத்திய அரசாங்கத்தின் ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தின் கீழ் சுமார் 20 ஆயிரம் இந்திய மருத்துவ மாணவர்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.

மருத்துவ படிப்பை எப்படி தொடரப்போகிறோம் என்றும், தங்கள் எதிர்காலம் குறித்தும், உக்ரைனில் படித்துவந்த இந்திய மாணவர்கள் கவலையும், குழப்பமும் அடைந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு புதிய நம்பிக்கை வெளிச்சமாக, பல உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன.டேனிலோ ஹாலிட்ஸ்கி லிவிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகம், இவானோ-பிரான்கிவ்ஸ்க் தேசிய மருத்துவ பல்கலைக்கழகம், வின்னிட்சியா தேசிய பிரோகோவ் மருத்துவ பல்கலைக்கழகம், போகோமேலெட்ஸ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை நேற்று முன்தினம் முதல் இணையவழி வகுப்புகளை தொடங்கின.

தற்போது பெரும்பாலும் மேற்கு உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ள நிலையில், மற்ற பல்கலைக்கழங்களும் இவ்வழியிலான வகுப்புகளை வரும் நாட்களில் துவங்க திட்டமிட்டுள்ளதாக தாயகம் திரும்பியுள்ள இந்திய மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர்.

ரஷியாவின் இடைவிடாத ஏவுகணை தாக்குதல் தொடரும் நிலையில் பல பேராசிரியர்கள் தங்கள் வீடுகள் அல்லது மறைவிடங்களில் இருந்து வகுப்புகளை எடுப்பதாகவும் அவர்கள் கூறினர். தினசரி வகுப்புகளுக்கான அட்டவணையும் அளிக்கப்பட்டுள்ளது.

பாடங்களை சிலைடுகள், வீடியோக்கள் மூலம் முடிந்தவரை நன்றாக புரிய வைக்க ஆசிரியர்கள் முயன்றாலும், செய்முறை வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லையே என்பது மாணவர்கள் பலரது வருத்தமாக உள்ளது. ஆனால் ஒன்றுமில்லாததற்கு இது பரவாயில்லை என்று தங்களைத் தாங்களே ஆறுதல்படுத்திக்கொண்டும் உள்ளனர்.

மீண்டும் வகுப்புகள் தொடங்கியது உணர்ச்சிகரமான தருணம் என்று பல இந்திய மாணவர்கள் தெரிவித்தனர். ‘எங்கள் ஆசிரியர்களும் உணர்ச்சிவசப்பட்டனர். தற்போது நடக்கும் போர் குறித்து நாங்கள் சிறிது நேரம் பேசினோம். இந்த நெருக்கடியான நேரத்திலும் வகுப்புகளை நடத்த ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முயற்சி பாராட்டுக்குரியது’ என்று சில மாணவர்கள் கூறினர். தங்களுக்கான தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இப்போதைக்கு மாணவர்களுக்கு இணைய வழியில் தினசரி டெஸ்டும், வாய்மொழி தேர்வும் நடைபெறுகின்றன.

இணையவழியில்தான் என்றாலும், மீண்டும் படிப்பு தொடங்கியிருப்பது இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ஆறுதலை தந்திருப்பதை அறிய முடிகிறது.

மேலும் செய்திகள்