பா.ஜ.க. ஆட்சியை பிடித்த 4 மாநிலங்கள்: புதிய முதல்-மந்திரிகளை தேர்ந்தெடுக்க மத்திய மந்திரிகள் நியமனம்..!!

பா.ஜனதா ஆட்சியை பிடித்த 4 மாநிலங்களில் புதிய முதல்-மந்திரிகளை தேர்ந்தெடுக்க மத்திய மந்திரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-03-15 01:33 GMT
Image Courtesy: PTI
புதுடெல்லி, 

பா.ஜனதா ஆட்சியை பிடித்த 4 மாநிலங்களில் புதிய முதல்-மந்திரிகளை தேர்ந்தெடுக்க அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பா.ஜனதா மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

இதன் அடுத்தகட்டமாக அந்த மாநிலங்களில் புதிய முதல்-மந்திரிகளை தேர்வு செய்து ஆட்சி அமைக்கும் பணிகளை பா.ஜனதா மேலிடம் முடுக்கி விட்டுள்ளது.

அதன்படி, புதிய முதல்-மந்திரிகளை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாநிலத்துக்கும் பா.ஜனதா மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை பார்வையாளராக பா.ஜனதா துணைத்தலைவர் ரகுபர் தாஸ் செயல்படுவார்.

உத்தரகாண்ட் மாநிலத்துக்கு மேலிட பார்வையாளராக ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். துணை பார்வையாளராக மத்திய மந்திரி மீனாட்சி லேகி இருப்பார்.

மணிப்பூர் மாநிலத்துக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மேலிட பார்வையாளராகவும், மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு துணை பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவா மாநிலத்துக்கு மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் மேலிட பார்வையாளராகவும், மத்திய மந்திரி எல்.முருகன் துணை பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் விரைவில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலத்துக்கு செல்வார்கள். பா.ஜனதா புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி, சட்டசபை கட்சி தலைவரை (முதல்-மந்திரி) முறைப்படி தேர்வு செய்வார்கள்.

பின்னர், தேர்வு செய்யப்பட்டவர், அந்த மாநிலத்தின் கவர்னரை சந்தித்து, ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை அளிப்பார். ஆட்சி அமைக்க உரிமை கோருவார். இந்த பணிகளையும் மேலிட பார்வையாளர்கள் கவனிப்பார்கள்.

மேலும் செய்திகள்